தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:21 AM IST (Updated: 1 Aug 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ், தொற்று இல்லா சான்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தென்காசி:
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ், தொற்று இல்லா சான்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்து உள்ளது. அவ்வப்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே, அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு தொடர்ந்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. 

கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரையில் இயங்கி வரும் சுகாதாரத்துறை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா நேற்று திடீரென அந்த சோதனைச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள ஊழியர்களிடம், எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும், அவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் சோதனைகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் டாக்டர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது:-

சுழற்சி முறையில்...

புளியரை சோதனைச்சாவடியில் வழக்கம்போல் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சோதனைகள் நடத்தப்படுகிறது. சுகாதார ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளாக இரவும் பகலும் பணியாற்றி வருகிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கொரோனா இல்லை என்ற சான்று இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் மாதிரி எடுக்கப்பட்டு கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்று சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

பதிவேடு

மேலும் கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலையங்களில் சுகாதார குழுவினர் முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கும் சிறப்பு பரிசோதனை நடைபெறுகிறது.
சோதனைச்சாவடியில் யாருக்காவது காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அங்கேயே அவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் எங்கே செல்கிறார்கள்? என்று கேட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்துக்கு வருபவர்களின் முகவரி, செல்போன் எண் போன்றவற்றை பதிவு செய்து அந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லையிலும் சோதனை

கேரளாவில் இருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கேரளாவில் இருந்து வருகை தரும் ரெயில்களில் வந்திறங்கும் பயணிகளை சுகாதார பணியாளர்கள் தடுத்து நிறுத்தி உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கிறார்கள்.

இதில் உடல்நலம் பாதிப்பு மற்றும் உடல் சோர்வு காணப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பணியை தற்போது மேலும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதுதவிர கேரளாவை சேர்ந்த பயணிகள் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியாக நெல்லைக்கு வருகிறார்கள். அவர்களது வருகை மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மருத்துவ குழுவினர் சென்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்கவும், 3-வது அலைக்கு அடித்தளம் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும் பணிகளை மேற்கொள்ள சுகாதார பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Next Story