நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்


நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:21 AM IST (Updated: 1 Aug 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தா.பழூர்:

நெல் அறுவடை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெல் விதைப்பு செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று போகம் விவசாயம் செய்யும் விவசாயிகள், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் விளைய வைக்கும் நெல்மணிகளை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். டெல்டா பாசன பகுதியான தா.பழூர் வட்டாரத்தில் கோடாலிக்கருப்பூர், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி ஆகிய இடங்களில் குருவை மற்றும் நவரை பட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது நெல் அறுவடை தொடங்கி சுமார் 40 சதவீதம் நவரை பட்ட அறுவடை நிறைவு பெற்ற நிலையில், நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.
இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை குவியல், குவியலாக கோடாலிக்கருப்பூர், தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீ்புரந்தான், முத்துவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து காத்திருந்தனர். அரசு தரப்பில் இருந்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் முத்துவாஞ்சேரி, கோடாலிக்கருப்பூர் ஆகிய இடங்களில் போராட்டங்களில் குதித்தனர்.
கொள்முதல் நிலையம்
இதைத்தொடர்ந்து ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முத்துவாஞ்சேரி கிராமத்தில் வருகிற 4-ந் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் தூத்தூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தொடங்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களும் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலேயே அமைந்துள்ளன.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடாலிக்கருப்பூர், சோழமாதேவி, இடங்கண்ணி, தென்கச்சிபெருமாள்நத்தம், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை மற்றும் நவரை பட்ட சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் இருந்து ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மணிகளை எடுத்துச்செல்வதற்கு 20 - 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிைல ஏற்படுகிறது. ஒரே இடத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு சென்றால், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகள் நீண்ட நாட்கள் காத்திருந்து விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.
வலியுறுத்தல்
இதனால் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாதது, வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தா.பழூர், காரைக்குறிச்சி, கோடாலிக்கருப்பூர் ஆகிய இடங்களில் மட்டுமாவது டெல்டா பாசன விவசாயிகள் பயனடையும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் நெல்மணிகளை விவசாயிகள் விற்க கடுமையான போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே தா.பழூர் டெல்டா பாசன விவசாயிகள் நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டு, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story