கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து கலெக்டர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை
கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
கொரோனா அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டது. இதையடுத்து, கர்நாடகத்தில் சமீபமாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அண்டை மாநிலங்களான மராட்டியம், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பெங்களூரு, சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கர்நாடகத்தில் 2 ஆயிரம் பேர் வரை சராசரியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கலெக்டர்களுடன் ஆலோசனை
இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெங்களூருவில் இருந்தபடியே மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மாலையில் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக மைசூரு, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை செயலாளர் ரவிக்குமார், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கல்லூரித்துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால, அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு, பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.
அறிக்கை அனுப்ப வேண்டும்
மேலும் மாவட்டங்களில் இருப்பு இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க தேவையான மருந்துகள் போதுமான அளவு இருப்பு உளளதா? என்பது குறித்தும் கலெக்டர்களிடம் அவர் கேட்டு அறிந்து கொண்டார். கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலும், அவர்கள் 72 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்திருந்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், அதனை தீவிரமாக கண்காணிக்கும்படி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை 24 மணிநேரமும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் 2 நாட்களுக்கு ஒரு முறை சோதனை சாவடிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எல்லை பகுதிகளில் எச்சரிக்கையாக...
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பிற மாநிலங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பதுடன், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்படும் விதிமுறைகளை நிலைமையை கருத்தில் கெரணடு மாற்ற வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் கர்நாடகத்திற்கு வந்தால், கண்டிப்பாக ஓட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
பசவராஜ் பொம்மை உத்தரவு
மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
கொரோனா விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் எக்காரணத்தை கொண்டும் அலட்சியமாக இருக்க கூடாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மாநகராட்சி கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story