ஆழ்கடலில் இன்று முதல் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள்
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிந்ததால், இன்று முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றன.
குளச்சல்,
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிந்ததால், இன்று முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றன.
மீன்பிடி தடைகாலம்
மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைகாலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரையான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களில் மே 31-ந்் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதி வரை விசைப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் முடிந்து விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்கிறார்கள்
இன்று முதல் கடலுக்கு...
மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இந்த தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளில் என்ஜின்களை பொருத்துவது, பெயிண்டு அடிப்பது, பேட்டரி மற்றும் ஒயரிங், வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மே 31-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் நீங்கியது. அதைத்தொடர்ந்து இன்று முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றன. இதையடுத்து விசைப்படகில் கொண்டு செல்ல தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஜஸ் போன்ற பொருட்களை விசைப்படகில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்தது.
சிறப்பு திருப்பலி
முன்னதாக மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதால் நேற்று குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குதந்தை மரிய செல்வன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் திரி, எண்ணெய் மந்திரிக்கப்பட்டு தொழிலாளர்கள் நெற்றியில் முத்திரை பதித்து ஜெபம் செய்தார்.
Related Tags :
Next Story