கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு ரூ.1¼ கோடி குட்கா பொருட்களை கடத்திய வழக்கில் 3 பேர் கைது
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு ரூ.1¼ கோடி குட்கா பொருட்களை கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
குட்கா பொருட்கள் பறிமுதல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் அவ்வப்போது போலீசாருக்கு தெரியாமல் கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்தநிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் நிறுத்தப்பட்டிருந்த 2 லாரிகளில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை நேற்று முன்தினம் போலீசார் கண்டுபிடித்தனர்.
மொத்தம் 7 ஆயிரத்து 300 கிலோ எடை கொண்ட அந்த குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த குட்கா பொருட்களை அன்னதானப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், சேலம் அருகே நாழிக்கல்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் 2 லாரிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து சிறிய வாகனங்களில் பிரித்து அனுப்பி சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும், கர்நாடகாவில் இருந்து கடந்த 16-ந் தேதி ஒரு லாரியிலும், 27-ந் தேதி ஒரு லாரியிலும் குட்கா பொருட்களை லாரி உரிமையாளர் செந்தில்குமார் சேலத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த 2 லாரிகளையும் டிரைவர் ரமேஷ் என்பவர், சேலம் குகையை சேர்ந்த சுப்பிரமணிக்கு சொந்தமான குடோனில் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு சுப்பிரமணியின் மருமகனான தாதகாப்பட்டியை சேர்ந்த நல்லப்பன் (35) உடந்தையாக இருந்துள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணி, இவருடைய மருமகன் நல்லப்பன் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அதேசமயம் தலைமறைவாக உள்ள செந்தில்குமார், டிரைவர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்மாபேட்டையில்...
இதேபோல், நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில், கர்நாடகாவில் இருந்து குட்காவை கடத்தி வந்து அதனை லாரியில் இருந்து மற்றொரு மினி சரக்கு வேனில் 4 பேர் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது, அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் 4 பேரும் தப்பி ஓடினர்.
அப்போது, ஒருவரை மடக்கி பிடித்தபோது, அவர் செல்போனை கீழே போட்டு விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து அந்த லாரி மற்றும் மினி சரக்கு வேனை போலீசார் சோதனை செய்தபோது, மாட்டுத்தீவனத்திற்கு இடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேனில் ரூ.35 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்ததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்றொருவர் கைது
இதனிடையே, அம்மாபேட்டையில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் லாரி டிரைவரான பூசராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சம் குட்கா பொருட்களை கடத்திய வழக்கில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story