கொரோனா கட்டுப்படுத்துதல் பணிகள் குறித்து ஆலோசனை: முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் கலெக்டர் கார்மேகம் உத்தரவு
கொரோனா கட்டுப்படுத்துதல் பணிகள் குறித்து சிறப்பு தனி அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சேலம், ஆக.1-
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுபடுத்துதல் பணிகள் குறித்து நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தனி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஷேக் அப்துல் ரஹமான், மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை முழுமையாக தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுகின்றார்களா? என்பதை மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள 69 சிறப்பு தனி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
தொற்று இல்லா மாவட்டமாக...
அவ்வாறு முககவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சிறப்பு தனி அலுவலர்கள் கொரோனா நோய் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான சளி தடவல் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வருவாய் துறை, சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சேலம் மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story