கொரோனா தொற்று பரவலால் கோவில்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பு அறநிலையத்துறை உதவி ஆணையர் தகவல்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம்,
கட்டுப்பாடுகள்
சேலம் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேசமயம், கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பக்தர்களுக்கு தடை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன், பக்தர்கள் வழக்கமாக சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறும் நீர்நிலைகளின் அருகில் உள்ள அம்மன் கோவில்கள், முனியப்பன் கோவில்களில் பக்தர்களால் வைக்கப்படும் பொங்கல் வைபவங்கள் நேர்த்திக்கடன், சிறப்பு வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணையதளங்கள் மூலம் ஒளிபரப்பு
மேலும், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, மாதாந்திர பிரதோசம், பவுர்ணமி வழிபாடுகள், தேய்பிறை-அஷ்டமி உள்ளிட்ட நாட்களில் எந்த சிறப்பு பூஜை வழிபாடுகளுக்கும், கோவில்கள் மற்றும் அதன் வளாகங்கள், சுற்றுப்புறங்களுக்கு வருவதற்கும், அங்கு கூடுவதற்கும் பக்தர்களுக்கு தற்போதைய நிலையில் அனுமதி இல்லை. கோவில்களில் வழக்கமான பூஜை, வழிபாடுகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும். அதேசமயம், கோவில்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் சம்பந்தப்பட்ட கோவில்களின் இணையத்தளங்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story