ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 July 2021 8:26 PM GMT (Updated: 31 July 2021 8:26 PM GMT)

சேலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி, அழகாபுரம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களை 15 நாட்களில் காலி செய்ய அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் வெள்ளக்கல்பட்டி உடைந்த பாலம் பகுதியில் சுமார் 6 ஏக்கர் வனத்துறை நிலத்தில் விவசாயம் மற்றும் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 
பின்னர் அவர்கள், வனத்துறை நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர்.


Next Story