ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையில் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராட தடை உதவி கலெக்டர் உத்தரவு
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையில் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர்
ஆடிப்பெருக்கு
மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றில் சேலம் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதையடுத்து அவர்கள் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதில் ஒரு சிலர் மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று மகிழ்ச்சியாக தங்கள் பொழுதை கழிப்பார்கள்.
ஆடிப்பெருக்கு விழாவின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் மேட்டூரில் கூடுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீராட தடை
இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆடிப்பெருக்கு விழா நாளான நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந்தேதியும், ஆடி 28 நாளான வருகிற 13-ந்தேதியும் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடுவதற்கும், மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கும், பண்ணவாடி பரிசல் துறைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல் அந்த 3 நாட்களும், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், வெள்ளாறு மல்லிகார்ஜூனசாமி கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், கண்ணணூர் மாரியம்மன் கோவில், காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில்களுக்கு பக்தர்கள் செல்லவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
3 நாட்கள்...
மேலும் மேட்டூர் அணை பூங்காவிற்கு செல்வதற்கும் பக்தர்கள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை சுற்றுலா பயணிகள் அணை பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் யாரும் செல்லாமல் இருக்க காவல் துறையினர், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
எனவே ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி 28 ஆகிய நாட்களில் உள்ளூர் நபர்களை தவிர வெளியூர் நபர்கள், வெளிமாவட்ட நபர்கள் யாரும் மேட்டூருக்கு வரவேண்டாம். இந்த உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story