செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது
கொப்பல் அருகே, கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர், செல்போன் சார்ஜர் வயரால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொப்பல்:
கள்ளக்காதல்
கொப்பல் தாலுகா முத்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இதுபோல எலபுர்கா தாலுகா யதோணி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(வயது 25). மஞ்சுநாத்துக்கும், மஞ்சுளாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குஷ்டகி டவுனில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக ஊழியராக மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மஞ்சுநாத்துக்கும், குஷ்டகியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் மஞ்சுநாத்தும், அந்த பெண்ணும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். இதுபற்றி மஞ்சுளாவுக்கு தெரியவந்து உள்ளது. இதையடுத்து பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி மஞ்சுநாத்திடம், மஞ்சுளா கூறி வந்து உள்ளார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
கழுத்தை இறுக்கி கொலை
இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மஞ்சுளாவை கொலை செய்ய மஞ்சுநாத் முடிவு செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுளாவை, மஞ்சுநாத்தை வெளியே அழைத்து சென்று உள்ளார். அவர்கள் 2 பேரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் குறித்து 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த மஞ்சுநாத் செல்போன் சார்ஜர் வயரை எடுத்து மஞ்சுளாவின் கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. இதில் மூச்சுத்திணறிய மஞ்சுளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த குஷ்டகி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கைது-பரபரப்பு
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததாலும், அதற்கு இடையூறாக இருந்ததாலும் மஞ்சுளாவை, மஞ்சுநாத் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து குஷ்டகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை, கணவனே கொலை செய்த சம்பவம் கொப்பல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story