மராட்டியம், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்


மராட்டியம், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
x
தினத்தந்தி 1 Aug 2021 2:09 AM IST (Updated: 1 Aug 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கொரோனா 3-வது அலை

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்திருப்பதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா 3-வது அலை இந்த மாதமே (ஆகஸ்டு) உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

  குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் மராட்டியத்தில் தறபோதே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அந்த 2 மாநிலங்களிலும் தற்போதே கொரோனா 3-வது அலை உருவாகி இருப்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை உருவாவதை தடுக்கவும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

  இதற்காக கர்நாடக எல்லைப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, குடகு, மங்களூருவில் கேரளாவில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல், மராட்டிய மாநிலத்தில் இருந்து வருபவர்கள் யாதகிரி, பெலகாவி மாவட்ட எல்லைப்பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில், கேரள மற்றும் மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கர்நாடக அரசு நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த 2 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகஅளவில் உள்ளதால், அங்கிருந்து வருபவர்களால் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து நேற்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சான்றிதழ் கட்டாயம்

  அதன்படி, கேரளா மற்றும் மராட்டியத்தில் இருந்து பெங்களூரு உள்பட கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதாவது 72 மணிநேரத்திற்கு முன்பாக கொரோனா பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வருபவர்கள், கர்நாடகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலும், 72 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்திருந்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ரெயில், விமானம், பஸ் உள்ளிட்ட எந்த மார்க்கமாக கர்நாடகத்திற்கு வந்தாலும், 2 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கட்டாயம் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

15 நாட்களுக்கு ஒருமுறை...

  ரெயில் மூலமாக கர்நாடகத்திற்கு வருபவர்களிடம், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு ரெயில்வே துறைக்கு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பஸ்களில் வரும் பயணிகளிடம் சான்றிதழ் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டியது டிரைவர் மற்றும் கண்டக்டரின் பொறுப்பாகும்.

  குறிப்பாக கேரளாவில் இருந்து கல்வி, மருத்துவம், வேலை, வியாபாரம், தொழில் விஷயமாக அடிக்கடி கர்நாடகத்திற்கு வந்து செல்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்திருந்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்து வைத்திருக்க வேண்டும்.

கலெக்டர்களுக்கு பொறுப்பு

  கேரள மாநில எல்லையில் உள்ள குடகு, தட்சிண கன்னடா, மைசூரு மாவட்டங்களிலும், மராட்டிய மாநில எல்லையில் உள்ள பெலகாவி, விஜயாப்புரா, கலபுரகி, யாதகிரி, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகளை அமைத்து, அந்த மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுக்க வேண்டும்.

  சோதனை சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது மாவட்டங்களின் பொறுப்பாகும என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இவற்றில் கேரளாவில் இருந்து அவசர மருத்துவ சேவைக்காக வரும் நபர்களுக்கு மட்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story