அண்ணாநகர் அருகே வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


அண்ணாநகர் அருகே வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:33 AM IST (Updated: 1 Aug 2021 9:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாநகர் அடுத்த திருமங்கலம்-கோயம்பேடு செல்லும் பகுதியில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்க போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து திருமங்கலம் உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வணிகவளாகத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வெளியேற்றினர். மேலும், அங்கு வேலை செய்து வந்த பணியாளர்கள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் உடனடியாக மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா? என தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதேசமயம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்தது யார்? என விசாரித்தனர். அம்பத்தூரில் உள்ள முகவரியை காட்டியதையடுத்து அங்கு சென்றனர். அங்கு தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 9 வயது சிறுவன் விளையாட்டாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு இருப்பதாக புரளி பரப்பியது தெரிய வந்தது. 

அதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனை எச்சரித்து விடுவித்தனர். வெடிக்குண்டு புரளியால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story