காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 18 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு: போலீஸ் சூப்பிரண்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 18 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
துரித நடவடிக்கைகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு குற்றங்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிகழா வண்ணம் இருக்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்கள், அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் சுதாகர் கடந்த 7-6-2021 அன்று பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போலீஸ் துறை மேற்கொண்டு வருகிறது.காஞ்சீபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்யப்பிரியா அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீஸ் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ரூ.1 கோடியே 18 லட்சம்
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக தற்போது 19 பேர் கைது செய்யப்பட்டு 24 குற்ற வழக்குகளில் 55 பவுன் நகைகள், 2 கிலோ 200 கிராம் வெள்ளி பொருட்கள், 10 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் என ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட 109 ரவுடிகள் கைது செய்யப்பட்டும் 35 ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும், திருந்தி வாழ நினைக்கும் ரவுடிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டும் 246 ரவுடிகளை எச்சரித்து வருவாய் ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தி
அவர்கள் ஓராண்டு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டுபிடித்து சிறையில் அடைக்க போலீஸ் துறைக்கு பெரும் பங்காற்றுகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் புதிதாக முக்கிய சாலைகளில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் புதிதாக காஞ்சீபுரத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடமான கோவில், கடைவீதி, பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் நடக்காத வகையிலும் அதை தடுக்கவும் அங்கங்கே சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர்ச்சியாக ரோந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்தால் அந்த பகுதிகளிலும் போலீஸ்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தரப்படும். மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்களை தைரியமாக போலீஸ் நிலையங்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கராஜ்கணேஷ், ஜெயராமன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முருகன், மணிகண்டன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story