திருத்தணி அருகே கிணற்றில் பெண் குழந்தை பிணம்
திருத்தணி அருகே விவசாய கிணற்றில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையின் பிணத்தை நேற்று போலீசார் மீட்டனர்.
கிணற்றில் குழந்தை பிணம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசி (வயது 50). விவசாயி. இவருடைய விவசாய கிணறு ஊருக்கு வெளியே சாலையோரத்தில் உள்ளது. அந்த கிணற்றின் அருகே தடுப்புச் சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேற்று வருவதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று தடுப்புச் சுவரை ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிகாரிகள் அந்த கிணற்றில் எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் ஒரு குழந்தையின் உடல் மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
உடனடியாக அவர்கள் இது குறித்து திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு திருத்தணி தாசில்தார் ஜெயராணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த கிணற்றில் மிதந்த குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். அது பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. குழந்தையை வீசி 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த பெண் குழந்தையை வீசியது யார்? குழந்தையின் தாயார் யார்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. திருத்தணி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story