அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெற்ற பட்டத்தை பரிசீலிக்க முடியாது


அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெற்ற பட்டத்தை பரிசீலிக்க முடியாது
x
தினத்தந்தி 1 Aug 2021 6:21 PM IST (Updated: 1 Aug 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பெறப்பட்ட எம்.ஏ. பட்டத்தை பரிசீலிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 10, 12-ம் வகுப்புகளை முடித்துவிட்டு நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமூகவியல் பட்டம் பெற்றுள்ளார். பின்னர், இதன் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி. நடத்திய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை சார் பதிவாளர் பணியை பெற்றார்.

இந்தநிலையில், முதல்நிலை சார் பதிவாளர் பதவி உயர்வுக்காக அவர் விண்ணப்பித்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘உதவியாளராக இருப்பவர் 2-ம் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு பெற தகுதியானவர். ஏற்கனவே, 10-ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பலர் பதவி உயர்வு பெற்று, முதல்நிலை சார் பதிவாளராக பணியாற்றுகின்றனர். எனவே, பதவி உயர்வுக்கு கல்வித்தகுதி தேவையில்லை. மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

பரிசீலிக்க முடியாது

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மணவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இளங்கலை படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட முதுகலை பட்டம் அரசு பணி மற்றும் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படாது என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதன் அடிப்படையில், செந்தில்குமாரை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கவில்லை. பதவி உயர்வுக்கு தகுதி மற்றும் திறனை பரிசீலிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, செந்தில்குமார் பெற்ற நேரடி எம்.ஏ. பட்டத்தை அவரது பதவி உயர்வுக்கு பரிசீலிக்க முடியாது. இந்த விஷயத்தில் அரசு சரியாக பரிசீலித்துள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story