பிளஸ்-2 துணைத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி


பிளஸ்-2 துணைத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி
x
தினத்தந்தி 1 Aug 2021 3:54 PM GMT (Updated: 1 Aug 2021 3:54 PM GMT)

பிளஸ்-2 வகுப்பு துணைத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான மதிப்பெண்ணை அரசு பள்ளிக்கல்வி, தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வை எழுதுபவர்களுக்கும் துணைத்தேர்வை அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அதில் தனித்தேர்வர்களாக துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிமாணவர்கள் தேர்ச்சி

பிளஸ்-2 துணைத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17(i)-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இந்த தேர்வை எழுதலாம். தங்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Next Story