நாற்கர சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்


நாற்கர சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:32 PM IST (Updated: 1 Aug 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே நாற்கர சாலை தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே நாற்கரசாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் அரிகிருஷ்ணன் (வயது 29).
இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டார். அப்போது அவர், தன்னுடைய நண்பரான காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த விக்கியையும் (28) அழைத்து சென்றார்.

தடுப்பு சுவரில் மோதியது 

நேற்று காலையில் அவர்கள் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, பின்னர் மாலையில் காரைக்குடிக்கு புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் துறையூர் கீரணிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (25) காரை ஓட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசன்குளம் நாற்கரசாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது.

2 பேர் பலி

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த விக்கி மற்றும் அரிகிருஷ்ணனின் தாத்தா கணபதி (88) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரிகிருஷ்ணன், அவருடைய மனைவி திவ்யபாரதி (27), மகள் கிருபாளினி (2), அரிகிருஷ்ணனின் தாயார் சீதா (53), உறவினரான காளியம்மாள், டிரைவர் வெங்கடேசன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். 

6 பேருக்கு தீவிர சிகிச்சை

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த விக்கி, கணபதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கயத்தாறு அருகே நாற்கரசாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story