ஆடி அமாவாசை நாளில் ஆறு, கடலில் குளிக்க அனுமதி கிடையாது; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


ஆடி அமாவாசை நாளில் ஆறு, கடலில் குளிக்க அனுமதி கிடையாது; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2021 9:45 PM IST (Updated: 1 Aug 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசை நாளில் ஆறு, கடலில் மக்கள் குளிக்க அனுமதி கிடையாது என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி:
ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை, தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிக்கவோ, கூடுவதற்கோ அனுமதி கிடையாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

விழிப்புணர்வு

தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியில் 3 இடங்களில் கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 80 பேருக்கு அரிசிப்பை வழங்கினார்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் பஸ்சி்ல் பயணம் செய்பவர்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும், பஸ், ஆட்டோ உட்பட பல வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
 தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் கொரோனா 3-ம் அலை பரவ தொடங்கி உள்ளது. இதனால் நம் மாநிலத்திலும் பரவக் கூடும் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இன்று (அதாவது நேற்று) முதல் 7-ந் தேதி (சனிக்கிழமை) வரை 7 நாட்கள் பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவித்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி நகரத்தில் பழைய பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அனுமதி இல்லை

மேலும் இது ஆடி மாதம் என்பதால் கோவில்களில் பொதுவாக கூட்டம் அதிகமாக கூடும். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் மிகப்பெரிய புண்ணியஸ்தலமாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும். இதனால் ஆகஸ்டு 1, 2, 3 ஆகிய தேதிகள் மற்றும் ஆடி அமாவாசை நாளான ஆகஸ்டு 8-ந் தேதி ஆகிய 4 நாட்களிலும் மேற்படி கோவில்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.அதே போன்று தூத்துக்குடி நகரத்தில் பனிமயமாதா கோவிலிலும் பொதுமக்கள் பங்களிப்பின்றி கடந்த ஜூலை 25-ந் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கூடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆகவே கொரோனா 3-வது அலையை தடுப்பதற்கு அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story