கேரளாவில் இருந்து தேனி வருவதற்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்
கேரளாவில் இருந்து தேனி வருவதற்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேனி:
கேரளாவில் இருந்து தேனி வருவதற்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஊரடங்கு வருகிற 9-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.
தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்கள், போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
வழிபாட்டு தலங்கள்
இந்த பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தேனி மாவட்டத்துக்குள் வருகை தருகின்ற நபர்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருப்பவர்கள் மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதுதவிர மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 8-ந்தேதி வரை மாவட்டத்தில் திருவிழா காலமாக உள்ளதால் இந்த 7 நாட்களிலும் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு வருகை தந்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தினந்தோறும் நடைபெறும் பூஜைகள் மட்டும் அங்குள்ள பணியாளர்களை கொண்டு தொடர்ந்து நடைபெறும். எனவே, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story