சாமி படங்களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல்
நாகையில் இருந்து இலங்கைக்கு சாமி படங்களில் மறைத்து வைத்துகடத்த முயன்ற ரூ.60 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து இலங்கைக்கு சாமி படங்களில் மறைத்து வைத்துகடத்த முயன்ற ரூ.60 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
96 கிலோ கஞ்சா
நாகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாகை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாகை 2-வது கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனையி்ட்டனர். சோதனையில் அந்த காரில் 8 பேர் சாமி படங்களுடன் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சாமி படங்களை எடுத்து பிரித்து பார்த்தனர். அப்போது அந்த படங்களின் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சாமி படங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த 8 பேரை பிடித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தினார்.
இலங்கைக்கு கடத்த முயற்சி
விசாரணையில் அவர்கள், நாகை கீச்சாங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த வீராகுமார் (வயது22), வெளிப்பாளையம் சுப்ரமணிய பத்தர் காலனியை சேர்ந்த முகேஷ்(24), புதுப்பள்ளி மேற்கு வேட்டைகாரனிருப்பு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நிவாஸ் (26), விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அருண் (23), காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி(26), ஆழியூர் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார்(42), அந்தணப்பேட்டை புடவைகார தெருவை சேர்ந்த ஜெகபர்சாதிக் (36), சிக்கல் மேலவீதியை சேர்ந்த தியாகராஜன்(42) என தெரியவந்தது. இவர்கள் திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து அதை சிறிய பொட்டலங்களாக போட்டு போலீசாருக்கு சந்தேகம் வராதபடி சாமி படங்களில் மறைத்து வைத்து காரில் நாகைக்கு கொண்டு வந்து , பின்னர் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
8 பேர் கைது
இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் ைகது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 96 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் என கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் காரை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story