மரத்தில் கார் மோதி காய்கறி கடைக்காரர் பலி; 6 பேர் படுகாயம்
கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் காய்கறி கடைக்காரர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதி காய்கறி கடைக்காரர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
காய்கறி கடைக்காரர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊருணி தெருவை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன் மகன் முத்துவேல் குமார் (வயது 39). இவர் காய்கறி கடை மற்றும் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஆவுடை ஈஸ்வரி (35).
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலில் பொங்கல் வைப்பதற்காக முத்துேவல் குமார் தனது குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்களை அழைத்துக் கொண்டு காரிலும், வேனிலும் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை வேனிலும், தன்னுடைய காரில் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டார். முத்துவேல் குமார் காரை ஓட்டினார்.
சாவு
நேற்று அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை அடுத்துள்ள கல்லூரி அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் முத்துவேல் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காரில் பயணம் செய்த ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகையா மகன் சாமியா பாண்டியன் (31), முருகன் மகன் சண்முகவேல் (37), சண்முகம் மகன் சிவா (24), பொன்னுச்சாமி மகன் மணிகண்டன் (34), குமார் மகன் முத்துச்செல்வம் (30), முத்துராமலிங்கம் (48) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். முத்துவேல்குமார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story