விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடக்கம்
விழுப்புரம், நாகப்பட்டிம் இடையே 4 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே உள்ள 194 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இப்பணி நடைபெற உள்ளது.
இத்திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது.
இடைக்கால தடை
மேலும், இத்திட்ட பணிகளில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மாநில எல்லை வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சீரமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இதில் மக்களிடம் கருத்து எதுவும் கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதையடுத்து பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.
பணிகள் தீவிரம்
தற்போது, இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் இப்பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். தற்போது விழுப்புரம் ஜானகிபுரத்தில்இருந்து புதுச்சேரி வரை இடம் கையகப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்பட்ட நிலங்களில் இருக்கும் பயிர்களை அகற்றும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story