அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை


அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 1 Aug 2021 10:24 PM IST (Updated: 1 Aug 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி வருகையையொட்டி பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஊட்டி,

ஜனாதிபதி வருகையையொட்டி பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதி நாளை வருகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பயிற்சி மையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி பேசுகிறார். இதற்காக அவர் நாளை(செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்து ராஜ்பவனில் தங்குகிறார்.

இதையொட்டி நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம், கோவை, ஈரோடு, தேனி உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் என மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வெளிமாவட்ட போலீசார்

வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று பாதுகாப்பு பணிக்காக ஊட்டிக்கு போலீசார் வந்தனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வைத்து, அவர்கள் எந்த இடத்தில் பணிபுரிய வேண்டும் என்று அறிவுரைகள் கூறி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், படகு இல்ல சாலை, மேரிஸ்ஹில், ஹில்பங்க், கலெக்டர் அலுவலக சந்திப்பு, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, ராஜ்பவன், ஊட்டி-குன்னூர் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை சந்தேக நபர்கள் யாரேனும் தங்கினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தங்கும் நபர்களது ஆவணங்களை பெற வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

கொரோனா பரிசோதனை

ஊட்டியில் இருந்து வெலிங்டனுக்கு சாலை வழியாக காரில் ஜனாதிபதி செல்லும் நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  இது தவிர ஊட்டி, கோத்தகிரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்பட பல்வேறு துறை அரசு ஊழியர்களிடம் சுகாதார குழுவினர் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுமட்டுமின்றி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் அல்லது கோத்தகிரி வழியாக அரசு உயர் அதிகாரிகள் கார் மூலம் ஊட்டிக்கு வர உள்ளனர். 

அந்த சாலைகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.


Next Story