புதுப்பொலிவு பெற்ற கூட்டுறவு தொழிற்சாலை
இன்கோசர்வ் முயற்சியால் கூட்டுறவு தொழிற்சாலை புதுப்பொலிவு பெற்று உள்ளது.
கோத்தகிரி
இன்கோசர்வ் முயற்சியால் கூட்டுறவு தொழிற்சாலை புதுப்பொலிவு பெற்று உள்ளது.
கட்டபெட்டு தொழிற்சாலை
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் கட்டபெட்டு பகுதியில் கடந்த 1976-ம் ஆண்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் மூலம் செயல்பட்டு வரும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை மேம்படுத்த நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டது.
பறவைகளின் உருவம்
அதன்படி கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை சுவர்களில் கண்ணை கவரும் வகையில் வர்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வாழும் வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்கள் வரையப்பட்டு உள்ளன.
மேலும் தொழிற்சாலை வளாகத்தில் மாதிரி தேயிலை பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிது. அங்கு கற்கள் செங்குத்தாக நடப்பட்டு, அதில் பிளாஸ்டோ பாரிஸ் மூலம் பறவைகள், வனவிலங்குகளின் உருவங்களை தத்ரூப சிலைகளாக வைத்து வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது.
புதுப்பொலிவு
இது மட்டுமின்றி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூளை சில்லறையில் விற்பனை செய்ய விற்பனையகமும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
உரிய பராமரிப்பு இன்றி காணப்பட்ட கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, தற்போது இன்கோ சர்வ் முயற்சியால் புதுப்பொலிவு பெற்று உள்ளது. மேலும் சுற்றுலா தலம் போல காட்சியளிக்கிறது. இதை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story