3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றம்
கடலூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்த 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு விடியல் கிடைத்துள்ளது.
கடலூர்,
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ஆரம்பத்தில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட செம்மண்டலம் பகுதி மக்களுக்கு வழங்கு வதற்காக 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொண்டு வரப்பட்டு, செம்மண்டலம் குண்டுசாலையில் உள்ள பல்நோக்கு சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
10 ஆண்டுகளாக....
தொடர்ந்து இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பு 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, உடனடியாக நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அதாவது 2011-2016, 2016-2021-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. இதனால் அந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் சமுதாய நலக்கூடத்தில் வைத்து பூட்டி வைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகள் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி யாருக்கும் பயன்படாமல் இருளில் மூழ்கி விடியலின்றி கிடந்தது.
சுட்டி காட்டப்பட்டது
தற்போது தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் சமுதாய நலக்கூடத்தை திறந்து இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை விடுபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். சமுதாய நலக்கூடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது பற்றி கடந்த மாதம் 27-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
மேலும் தினத்தந்தியில் கடந்த 31-ந்தேதி தலையங்கத்திலும் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது ஆட்சி மாறினாலும் அவர்கள் செய்த நல்ல திட்டங்கள், சமூக நல உதவிகள் தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தினத்தந்தி செய்தி எதிரொலி
இதைத்தொடர்ந்து தினத்தந்தி செய்தி எதிரொலியாக அரசும், மாவட்ட நிர்வாகமும், உடனடியாக தலையிட்டு சமுதாய நலக்கூடத்தில் இருந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. அதில் நல்ல நிலையில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகளை அரசு அலுவலகங்கள் போன்ற பிற பயன்பாட்டிற்கும், பழுதானவற்றை சரி செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் உள்ள பல்நோக்கு சமுதாய நலக்கூடத்தை தாசில்தார் பலராமன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் உதயசந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் முன்னிலையில் வருவாய்த்துறை ஊழியர்கள் திறந்து, அதில் உள்ள 3,139 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வாகனங்கள் மூலம் ஏற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர். அதாவது கடலூர் டவுன்ஹாலில் உள்ள சிறிய அறைக்கு மாற்றினர்.
சீரமைக்கும் பணி தொடக்கம்
தொடர்ந்து அந்த சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பல்நோக்கு சமுதாய நலக்கூடம், சுனாமி அவசர கால உதவித்திட்டம் 2005-2006-ம் ஆண்டு ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
அதில் திருமணம், திருமண வரவேற்பு, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைத்து கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி இருந்ததால், அந்த கட்டிடம் தற்போது பழுதாகி உள்ளது. சமுதாய நலக்கூடத்தில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் உடைத்து காணப்படுகிறது. அதை சுற்றிலும் முட்செடிகள், கொடிகள் படர்ந்து உள்ளது. இதை அகற்றி, கட்டிடங்களை புதுப்பிக்கும் பணிகளையும் நகராட்சி ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விடியல் கிடைத்துள்ளது
கடலூர் சமுதாய நலக்கூடத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக இருளில் கிடந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் விடியல் கிடைத்துள்ளது. சமுதாய நலக்கூடத்திற்கும் விடிவு காலம் பிறந்ததுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள ரெட்டி சத்திரம் கட்டிடம், கடலூர் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களிலும் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் 7,619 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. இவை அனைத்தையும் சீர் செய்து, விடுபட்ட நபர்கள் அல்லது அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
Related Tags :
Next Story