போலீசாரை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம்
தமிழக வாகன ஓட்டிகளிடம் கட்டாய அபராத தொகை வசூலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநில போலீசாரை முற்றுகையிட்டு, வாகன ஓட்டிகள் திடீரென மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர்.
இது தவிர சென்னையில் இருந்து நாகை, தஞ்சை செல்லும் வாகன ஓட்டிகளும் புதுச்சேரி மாநிலம் வழியாக தான் வந்து செல்கிறார்கள். இதற்கிடையில் கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே புதுச்சேரி மாநில எல்லையில் அந்த மாநிலத்தை சேர்ந்த போலீசார் திரளாக நின்று கொண்டு கடலூர் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்குள் செல்லும் தமிழக வாகனங்களை நிறுத்தி கொரோனா வரி என்ற பெயரில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அபராத தொகை வசூல் செய்கின்றனர்.
அடாவடி
அதாவது, இரு சக்கர வாகன ஓட்டிகள் முக கவசம், ஹெல்மெட் அணிந்து அனைத்து வாகன ஆவணங்களையும் காண்பித்தாலும் புதுச்சேரி மாநில போலீசார் அடாவடியாக கொரோனா வரி என்ற பெயரில் கட்டாய அபராத தொகை வசூல் செய்கின்றனர். அபராத தொகை செலுத்தினால் மட்டுமே புதுச்சேரி மாநிலத்திற்குள் அனுமதிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
அபராத தொகை வழங்காத வாகன ஓட்டிகளை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்காமல் அடாவடியாக பேசி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக வாகன ஓட்டிகள் பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல்
புதுச்சேரி போலீசார் சின்ன கங்கணாங்குப்பம் அருகில் தமிழக வாகன பதிவு எண் கொண்ட வாகனங்களை நேற்று மதியம் வழிமறித்து கொரோனா வரி எனக்கூறி கட்டாய அபராத தொகையை வசூல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வாகன ஓட்டிகள் அனைவரும் ஒன்று திரண்டு புதுச்சேரி மாநில போலீசாரை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல், உரிய ஆவணம் இல்லாமல் செல்லும் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை விடுகிறீர்கள். ஏன் எங்களிடம் மட்டும் அபராத தொகை வசூல் செய்கிறீர்கள் என்று புதுச்சேரி மாநில போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
முற்றுகை
ஒரு சிலர் தங்கள் வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி, போலீசாரை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு, உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர்.
இதை கேட்ட தமிழக வாகன ஓட்டிகள் வருங்காலங்களில் இதுபோன்ற அபராதம் வசூலித்தால் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்துவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story