சாராயத்தை ஒழிக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் டி ஐ ஜி பாண்டியன் பேச்சு


சாராயத்தை ஒழிக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் டி ஐ ஜி பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 1 Aug 2021 10:39 PM IST (Updated: 1 Aug 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

சாராயத்தை ஒழிக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என டி ஐ ஜி பாண்டியன் கூறினார்

திருக்கோவிலூர்

புறக்காவல் நிலையம் திறப்பு

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் புறக்காவல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கினார். 
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து பேசியதாவது:-

திருந்த வேண்டும்

வீரபாண்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் காலம் காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த போதிலும் இன்னும் சிலர் திருந்தாமல் உள்ளனர். இனியாவது அவர்கள் திருந்த வேண்டும். வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சும் தொழில் நடைபெறவில்லை என்பதை 100 சதவீதம் மாற்றி காட்டவே இங்கு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த புறக்காவல் நிலையம் சாராய ஒழிப்பு பணியிலும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் செயல்படும். ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் 2 போலீஸ்காரர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் இங்கே பணியில் ஈடுபடுவார்கள். இதை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

கோரிக்கை மனு

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பாண்டியனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட அவர் இந்தப் பகுதியில் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டவர்கள் திருந்தி மறுவாழ்வு பெறும் வகையில் தொழில் தொடங்கவும், இளைஞர்கள் ராணுவம் மற்றும் போலீசில் சேருவதற்கும் பயிற்சி மையம் அமைப்பது குறித்தும், மத்திய-மாநில அரசுகளின் மறுவாழ்வு நடவடிக்கைகளை இந்த பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், கண்டாச்சிபுரம் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்க கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story