வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை,
வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
வால்பாறை பகுதியில் கடந்த மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து. மேலும் வனப்பகுதியில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின.
தொடர் மழையின் காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பணிகள் வரத்து குறைந்தது. மேலும் கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியதால், சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க போலீசாரும், வனத்துறையினரும் தடை விதித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் குறைய தொடங்கியது. இதன்படி கடந்த 17 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் குறைந்தது. மேலும் மழை பெய்யவில்லை.
இதனால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சோலையார் அணை, கூழாங்கல் ஆற்றில் குவிந்தனர்.
குளித்து மகிழ்ந்தனர்
கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் போலீசாரின் பாதுகாப்போடு நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரையோரம் இறங்கி குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன்படி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆற்றில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.
இதேபோல வால்பாறை அருகில் உள்ள மற்றொரு சுற்றுலா தலமான வெள்ளமலை டனல் பகுதியில் மழை காரணமாக நீர்வீழ்ச்சி உருவாகி இருந்தது. இந்த நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்தனர். பலர் புதிய நீர்வீழ்ச்சியின் முன்பும், டனல் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தின் மீது நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தில் உறுதி தன்மையை அறியாமலும், ஆபத்தை உணராமல் பலர் நடத்து சென்றனர். மேலும் இந்த இடம் போதிய வசதி இல்லாததால் குளிக்க வந்த பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கண்காணிக்க வேண்டும்
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வெள்ளமலை டனல் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதலில் வந்தவர்கள் நீண்ட நேரம் குளிப்பதால், அடுத்து வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
நீர்வீழ்ச்சியில் மது அருந்திவிட்டு சிலர் குளிப்பதால் குடும்பத்துடன் வருபவர்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது. டனல் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும்.
வெள்ளமலை டனல் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் உயர் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story