நீடாமங்கலம் அருகே பெற்றோர் திட்டியதால் நண்பர்களுடன் விஷம் குடித்த வாலிபர் சாவு 2 பேர் மருத்துவமனையில் அனுமதி


நீடாமங்கலம் அருகே பெற்றோர் திட்டியதால் நண்பர்களுடன் விஷம் குடித்த வாலிபர் சாவு 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 1 Aug 2021 11:05 PM IST (Updated: 1 Aug 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே பெற்றோர் திட்டியதால் நண்பர்களுடன் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அருகே பெற்றோர் திட்டியதால் நண்பர்களுடன் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

வெளிநாட்டில் வேலை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கப்பலுடையான் குடியானத்தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன் ஆனந்த் (வயது26), ராஜசேகரன் மகன் அசோக்குமார் (26), அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (28). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஆனந்த், அசோக்குமார் ஆகிய இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக ஊருக்கு வந்தனர். ஆசைத்தம்பி நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 
நேற்று முன்தினம் கமுககுடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கப்பலுடையான் பகுதிக்கு வந்து மது அருந்தி உள்ளனர். அவர்களிடம், ஆனந்த், அசோக்குமார், ஆசைத்தம்பி ஆகிய 3 பேரும் இங்கு வந்து ஏன் மது அருந்துகிறீர்கள்? என கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் மது அருந்த வந்த கமுககுடியை சேர்ந்தவர்களின் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தினர். 

தற்கொலை 

இதுதொடர்பாக கமுககுடியை சேர்ந்தவர்கள் கப்பலுடையான் கிராமத்தினரிடம் முறையிட்டபோது சேதப்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே நண்பர்கள் 3 பேரையும் அவர்களின் பெற்றோர் திட்டினர்.   இதில் மன வேதனை அடைந்த 3 பேரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். 
அதன்படி பூச்சி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்தனர். இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரையும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் நேற்று பரிதாபமாக இறந்தார். ஆசைத்தம்பி, அசோக்குமார் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விசாரணை

இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
ஒரே நேரத்தில் நண்பர்கள் 3 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அதில் ஒருவர் பலியானதும் அந்த பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story