கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்ட மக்கள்


கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்ட மக்கள்
x
தினத்தந்தி 1 Aug 2021 5:40 PM GMT (Updated: 1 Aug 2021 5:40 PM GMT)

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதில் விதி மீறியதாக 104 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரும் மீன்கள் கடலூர் துறைமுக மீன்பிடி தளத்தில் வைத்து விற்கப்படும். இந்த மீன்களை வியாபாரிகள் மற்றும் மீன்பிரியர்கள் வாங்கி செல்வார்கள். அவ்வாறு மீன் வாங்க வரும்போது, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் விதிகளை மீறுவதாக புகார் எழுந்தது. இது கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் கூட்டம் கூடுவதை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் துறைமுக சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் துறைமுகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

போட்டி போட்டு மீன் வாங்கினர் 

கடலூர் துறைமுகத்தில் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர். அவர்கள் போட்டி போட்டு மீன் வாங்கிச்சென்றனர். 
கடந்த வாரத்தை விட  நேற்று கடலூர் துறைமுகத்திற்கு மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனாலும் மீன்களின் விலை குறையவில்லை. நேற்று ஒரு கிலோ சங்கரா, பாறை போன்ற மீன்கள் ரூ.400-க்கும், வஞ்சிரம் ரூ.800 முதல் ரூ.900 வரையிலும், கனவா ரூ.300-க்கும் விற்பனையானது. 

104 பேர் மீது வழக்கு

இதற்கிடையே நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் வந்த 80 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றி வந்த 10 டிரைவர்கள் மீதும், வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தாத 14 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதவிர முக கவசம் அணியாத 15 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story