நண்பர்களுடன் சென்ற வாலிபர் ஆற்றில் பிணமாக கிடந்தார் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி அருகே நண்பர்களுடன் சென்ற வாலிபர் ஆற்றில் பிணமாக கிடந்தார். இதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி
வாலிபர்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் ஆனந்தராஜ்(வயது 24). இவர் திருச்சியில் கட்டிட வேலை செய்து வந்தார்.
கடந்த 30-ந் தேதி இரவு திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஆனந்தராஜ் நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் ஆகாஷ், பிரகாஷ், அபி ஆகியோருடன் வெளியே சென்றார்.
மர்ம சாவு
பின்னர் அன்று மதியம் மலைக்கோட்டாலம் கோமுகி ஆற்று பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆனந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்தராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
நண்பர்களிடம் விசாரணை
மேலும் ஆனந்தராஜின் நண்பர்களான ஆகாஷ், பிரகாஷ், அபி ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் ஆனந்தராஜின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததை அடுத்து உடலை பெற்று செல்லுமாறு அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
சாலை மறியல்
ஆனால் ஆனந்தராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என கூறி நிறைமதி கிராமத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆனந்தராஜின் தாய் மூக்காயி திடீரென மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை நிழல் உள்ள பகுதிக்கு தூக்கி சென்று முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தாசில்தார் பிரபாகரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆனந்தராஜ் இறப்பு சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாலை 4 மணியளவில் மறியலை கைவிட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியலால் கள்ளக்குறிச்சியில் இருந்து வேப்பூர், விருத்தாசலம், திட்டக்குடி செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க நிறைமதி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே நண்பர்களுடன் சென்ற வாலிபர் ஆற்றில் பிணமாக இறந்து கிடந்த சம்பவத்தில் அவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் நிறைமதி கிராமத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
Related Tags :
Next Story