நாட்டார் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை-தமிழரசி எம்.எல்.ஏ. உறுதி


நாட்டார் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை-தமிழரசி எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 1 Aug 2021 11:34 PM IST (Updated: 1 Aug 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

நாட்டார் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசி எம்.எல்.ஏ. உறுதி அளித்து உள்ளார்.

மானாமதுரை,

நாட்டார் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசி எம்.எல்.ஏ. உறுதி அளித்து உள்ளார்.

நாட்டார் கால்வாய்

மானாமதுரை அருகே கிளங்காட்டூர், அன்னவாசல், எம்.கரிசல்குளம், அரிமண்டபம், தீயனூர், மங்கையேந்தால் உள்ளிட்ட 16 கிராமங்கள் மழை மறைவுப் பகுதிகளாக உள்ளன. அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கிருங்காக்கோட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் மூலம் 16 பெரிய கண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 25-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறுகின்றன. மொத்தம் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளே சொந்தமாக ரூ.3 லட்சத்தில் கால்வாயை தூர்வாரினர். அதன்பிறகு கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், புதர் மண்டியதால், மீண்டும் ரூ.1 கோடியில் கால்வாய் தூர்வாரப்பட்டது இதுவரை இந்த கால்வாயில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. அப்பகுதி பொதுமக்களும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆய்வு

இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் பொருட்டு மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழரசி எம்.எல்.ஏ. நாட்டார் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் நேற்று நாட்டார் கால்வாய் பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அவர் பார்வையிட்டார். அப்போது நாட்டார் கால்வாய் பாசன சங்க தலைவர் துபாய் காந்தி, மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை, ராஜமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர் துணை செயலாளர் பாலசந்தர் ஆகியோர் உடன் சென்றனர்.

தண்ணீர் கொண்டு வரப்படும்

இது குறித்து தமிழரசி எம்.எல்.ஏ. கூறும் போது, கடந்த 30 ஆண்டு காலமாக இந்த திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அரசு நாட்டார் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற முன்வரவில்லை. நாங்கள் தேர்தல் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் பொருட்டு முதற்கட்டமாக நாட்டார்கால்வாயை விரிவாக்கம் செய்து, தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.
 ஊரக வளர்ச்சி துைற அமைச்சர் பெரியகருப்பனின் ஆலோசனைப்படி முதல்-அமைச்சரை சந்தித்து நாட்டார் கால்வாய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம். 16 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கால்வாயில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story