மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும். மாநில பொதுச்செயலாளர் பேட்டி
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ.க. ஆதரவு தெரிவிக்கும் என்று வேலூரில் பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.
வேலூர்
கே.டி.ராகவன் பேட்டி
தமிழக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் நேற்று வேலூர் வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு இந்தாண்டு முதல் மருத்துவ படிப்பில் சேர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் அறிவித்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
இந்தாண்டில் மருத்துவக்கல்வி மற்றும் மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சமூக நீதிக்கான கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது.
மத்தியில் பா.ஜ.க.வின் 7 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான பணி தொடங்கி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அருகேயுள்ள இரு மாவட்டங்களில் தற்காலிகமாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி கட்டுமான பணி முடிந்த பின்னர் அங்கு அவர்களின் படிப்பு தொடரும்.
பா.ஜ.க. ஆதரவு
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நிலைப்பாட்டுக்கு தமிழக பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி தொடர்பாக எங்களின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து ஆட்சிக்கு வந்தது. அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்களது நடவடிக்கையை பார்த்தால் வாக்குறுதியை நிறைவேற்றுவது போல் தெரியவில்லை.
வரியை குறைக்க வேண்டும்
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. தற்போது தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளதால் ஆலை மூடப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்சிஜன் தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து உற்பத்தியை தொடங்கலாம். தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி பட திறப்பு விழாவில் பா.ஜ.க. கலந்து கொள்ளும்.
பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும். இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒலிம்பிக்கில் இந்தியா அதிகளவு பதக்கங்கள் பெறாதது வருத்தமே. இனி வரும் நாட்கனில் பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்கள் பெறாதது குறித்த காரணத்தை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட தலைவர் தசரதன், செயலாளர் சரவணகுமார், ஊரக வளர்ச்சிப்பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story