‘நீட் தேர்வில் தி.மு.க. அரசியல் செய்யக்கூடாது’-பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
‘நீட் தேர்வில் தி.மு.க. அரசியல் செய்யக்கூடாது’ என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நெல்லை:
‘நீட் தேர்வில் தி.மு.க. அரசியல் செய்யக்கூடாது’ என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வில் அரசியல்
நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் வரவேற்பும், சில மாநிலங்களில் எதிர்ப்பும் உள்ளது. மருத்துவ படிப்பில் மத்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தமிழக மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை எந்த காலத்திலும் நிறைவேற்றியது கிடையாது. அவர்கள் 1967-ம் ஆண்டு தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றியது கிடையாது. அதுபோல் மாணவர்களை நீட் தேர்விலும் ஏமாற்றாதீர்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யக்கூடாது.
மருத்துவ மாணவர்கள் உயர்வு
இந்தியாவில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு 139 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 205 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் இருந்தன. தற்போது நாடு முழுவதும் 289 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 269 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. தமிழகத்துக்கு மட்டும் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கி உள்ளது.
இதேபோல் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். படிப்பில் ஆண்டுக்கு 54 ஆயிரத்து 348 மாணவர்களும், முதுநிலை படிப்புகளில் ஆண்டுக்கு 30 ஆயிரத்து 191 மாணவர்களும் பயின்றனர். தற்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் ஆண்டுக்கு 84 ஆயிரத்து 649 மாணவர்களும், முதுநிலை படிப்புகளில் 54 ஆயிரத்து 275 மாணவர்களும் பயில்கின்றனர்.
5-ந் தேதி உண்ணாவிரதம்
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை நிச்சயமாக கட்டப்பட மாட்டாது.
காவிரி பிரச்சினையில் தி.மு.க.வினர் 50 ஆண்டுகளாக அரசியல் செய்து, நாடகம் நடத்தி வருகிறார்கள். காவிரி பிரச்சினைக்காக டெல்டா மாவட்டங்களில் வருகிற 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் மகாராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story