விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை


விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை
x
தினத்தந்தி 1 Aug 2021 7:44 PM GMT (Updated: 1 Aug 2021 7:44 PM GMT)

ஆடிப்பெருக்கை முன்னிட்டு விதவிதமாக தயாரிக்கப்பட்ட சிறுதேர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தா.பழூர்:

சிறுதேர்கள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆடிப்பெருக்கை, காவிரி ஆற்றின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றின் படுகைகளில் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அப்போது சிறுவர்கள், சிறுமிகள் சப்பரத்தட்டி என்னும் சிறு தேரினை வண்ண, வண்ண காகிதங்கள் கொண்டு அலங்கரித்து ஓட்டி விளையாடுவார்கள். அதற்கான சிறு தேர்களை தச்சுத் தொழிலாளர்கள் சுமார் பத்து நாட்களுக்கு முன்பே தயார் செய்து விற்பனை செய்வார்கள். ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் முற்காலங்களில் அதிக அளவு தண்ணீர் வரத்து இருக்கும்.
ஆனால் சமீப காலமாக கொள்ளிடம் ஆற்றில் சரியான நேரத்தில் நீர் வரத்து இல்லாதபோது, ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் கேள்விக்குறியாகவே இருக்கும். இந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து இருக்கிறது. இருந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காலமாக இருப்பதால், கூட்டம் கூடுவதை தவிர்த்து, பொதுமக்கள் தனித்தனியாக ஆற்றங்கரைகளில் வழிபட்டு வருகிறார்கள். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் அவர்களுக்கு சப்பரத்தட்டி ஓட்டுவது மிகுந்த மன மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும்.
மந்தம்
இதனால் தச்சுத்தொழிலாளர்கள் தற்போது விதவிதமான சிறு தேர்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அளவு மற்றும் கலைநயத்தை பொறுத்து ஒரு தேர் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறுதேர் தயாரிக்கும் தச்சுத்தொழிலாளர்களிடம் விற்பனை குறித்து கேட்டபோது, கடந்த காலங்களில் உள்ளதுபோல் சிறுவர், சிறுமிகளுக்கு சப்பரத்தட்டி ஓட்டுவது அவ்வளவு பெரிய விஷயமாக தோன்றவில்லை. அவர்கள் செல்போன்களில் வீடியோ கேம்கள் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே சிறுதேர் விற்பனை மந்தமாகவே உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான சப்பரத்தட்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளை சொல்லித்தந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆடிப்பெருக்கு பண்டிகையின் நடைமுறைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அடுத்த தலைமுறைகளில் சப்பரத்தட்டி என்ற பொருள் வழக்கொழிந்து போய்விடும். அதுமட்டுமின்றி இதுபோன்று பண்டிகைக்கால உற்பத்திப் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு பாரம்பரிய பண்டிகைகளை அரசு விழாவாக கொண்டாடி தமிழ் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வளர்க்க வேண்டும், என்றனர்.

Next Story