ஓடும் காரில் தீப்பிடித்தது


ஓடும் காரில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 2 Aug 2021 1:36 AM IST (Updated: 2 Aug 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சென்ற கார் திடீரென்று தீப்பிடித்தது. காரில் பயணம் செய்த ஊராட்சி குழு தலைவர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சங்காரெட்டிகோட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 41). இவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளார். தற்போது செம்பட்டியில் மின்வாரிய அலுவலகம் எதிரே வசித்து வருகிறார். 

இவர் நேற்று மாலை அய்யம்பாளையம் அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அரசு காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவருடன் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் கருத்தராஜா இருந்தார். 

காரை திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த சாமியப்பன் (57) ஓட்டினார். அந்த கார் வத்தலக்குண்டு-செம்பட்டி ரோட்டில் போடிகாமன்வாடி பிரிவு அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் காரை சாலையோரமாக நிறுத்தினார். 

காரில் இருந்து 3 பேரும் அவசரமாக இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து மளமளவென்று எரிந்தது. இதுகுறித்து செம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தகவலறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story