ஆடி திருக்கல்யாண திருவிழா
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாணம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி அளவில் கோவிலில் அம்மன் சன்னதி எதிரே மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் கொடி மரத்திற்கு எதிரே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்த பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் ராஜாகுமரன்சேதுபதி, ராணி லட்சுமிகுமரன் சேதுபதி, மேலாளர் சீனிவாசன் மற்றும் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், செல்லம், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்த்தவாரி
கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் நாளை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை காரணமாக பக்தர்கள் இல்லாமலே நேற்று கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கோவிலில் இருந்து சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனாபரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு காரணமாக சாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோவிலின் உள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று கோவிலின் 3-ம் பிரகாரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 9-ந் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ள அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ராம தீர்த்தம் தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி கோவிலில் வருகி்ற 11-ந் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி-அம்பாள் திருக்கல்யாணம் 12-ந் தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
ரத்து
திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக 17-ந் தேதி சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. திருவிழா தொடங்கி யதில் இருந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் அம்பாள் தங்கப்பல்லக்கு மற்றும் பல விதமான வாகனங்களில் பஞ்சமூர்த்தி களுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி நான்கு ரத வீதிகளை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதிவுலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் 3-ம் பிரகாரத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டும் ராமேசுவரம் கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் நடைபெற்றதுடன் தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story