கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
மைசூரு:
கே.ஆர்.எஸ்., கபினி அணைகள்
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ளது கே.ஆர்.எஸ் எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணை. இதுபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சஹள்ளியில் அமைந்து உள்ளது கபினி அணை. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து தமிழகம் செல்கிறது. தமிழக-கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது.
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று 114.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 882 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,260 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் கொண்ட கபினி அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 2279.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 610 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதாவது 2 அணைகளில் இருந்தும் 10,260 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story