கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்; பசவராஜ் பொம்மை திடீர் டெல்லி பயணம்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் நாளை மறுதினம் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20 எம்.எல்.ஏ.க்களின் உத்தேச பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
மழை- வெள்ளம்
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த 28-ந் தேதி பதவி ஏற்றார். அன்று அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றுள்ளார். மந்திரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த வாரம் டெல்லிக்கு சென்றிருந்த பசவராஜ் பொம்மை மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு மேலிட தலைவர்கள், மந்திரிகளின் பெயர் பட்டியலை அடுத்த சில நாட்களில் அனுப்புவதாக உறுதியளித்து உள்ளனர்.
மந்திரிகள் யாரும் இல்லாததால் பசவராஜ் பொம்மை ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்னொருபுறம், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகத்தில் கனமழையால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மந்திரி சபை விரிவாக்கம்
குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள் நியமிக்கப்படாததால் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் கர்நாடக மக்கள் பா.ஜனதா மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பசவராஜ் பொம்மை பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை நிருபர்களிடம் கூறுகையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கட்சி மேலிடத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறேன். அனுமதி கிடைத்ததும், உடனடியாக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான அனுமதி இன்று (அதாவது நேற்று) அல்லது நாளை (இன்று) கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
திடீர் டெல்லி பயணம்
இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக விவாதிக்க டெல்லி வரும்படி பா.ஜனதா மேலிடம், பசவராஜ் பொம்மைக்கு நேற்று மாலை அழைப்பு விடுத்தது. அதன்படி அவர் நேற்று மாலை 5.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் 20 எம்.எல்.ஏ.க்களின் பெயர் விவரம் அடங்கிய உத்தேச பட்டியலையும் கொண்டு சென்றுள்ளார். அந்த பட்டியலுக்கு பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு நாளை மறுதினம் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி என்று சொல்லப்படுகிறது.
அனுமதி கிடைக்கும்
முன்னதாக திடீர் டெல்லி பயணம் குறித்து பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "நான் இன்று (நேற்று) டெல்லி செல்கிறேன். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசுகிறேன். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி கிடைக்கும்" என்றார்.
இந்த பயணத்தை முடித்துவிட்டு பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) மாலையே பெங்களூரு திரும்புகிறார். அதன் பின்னர் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச பட்டியல் வெளியீடு
இதற்கிடையே மந்திரிகளாக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. மாதுசாமி, 2. ஆர்.அசோக், 3. சுதாகர், 4. பைரதி பசவராஜ், 5. எஸ்.டி.சோமசேகர், 6. முருகேஷ் நிரானி, 7. கோவிந்த் கார்ஜோள், 8. அஸ்வத் நாராயண், 9. ஸ்ரீராமுலு, 10. உமேஷ்கட்டி,
11. பாலச்சந்திர ஜார்கிகோளி, 12. ராஜூகவுடா நாயக், 13. அரக ஞானேந்திரா, 14. ரேணுகாச்சார்யா, 15. பூர்ணிமா சீனிவாஸ், 16. திப்பாரெட்டி, 17. சுனில்குமார், 18. ஹாலாடி சீனிவாசஷெட்டி, 19. அரவிந்த் பெல்லத், 20. பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
10 பேர் புதியவர்கள்
இந்த 20 பேரில் 10 பேர் எடியூரப்பா மந்திரிசபையில் இருந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் புதிதாக மந்திரிசபையில் சேர்க்கப்பட இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்களில் 3 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 34 பேர் கொண்ட மந்திரிசபையில் இந்த 21 போ் போக இன்னும் 13 இடங்கள் காலியாக இருக்கும். மந்திரி பதவி பெற பல எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினார்
கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக எடியூரப்பாவை அவரது இல்லத்தில் நேற்று காலை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். அப்போது யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசினர். மந்திரி பதவிக்கு போட்டி அதிகமாக உள்ளதால், பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மூத்த மந்திரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது. அதனால் மூத்த மந்திரிகள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
2-வது முறையாக டெல்லி சென்றார்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை கடந்த 29-ந்தேதி டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் கர்நாடகத்திற்கான நிதி உதவி, மேகதாது அணை உள்பட நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். 30-ந்தேதி இரவு தான் அவர் பெங்களூருவு திரும்பினார். இந்த நிலையில் 2-வது முறையாக அவர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story