எடப்பாடி அருகே 9 வயது சிறுமி கொலை?-தாய் உள்பட 2 பேரிடம் விசாரணை
எடப்பாடி அருகே 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டாளா? என்பது குறித்து தாய் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:
எடப்பாடி அருகே 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டாளா? என்பது குறித்து தாய் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 வயது சிறுமி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் கோவலன் காட்டு நடுவளவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு 9 வயதில் சாருநிதி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருந்தனர். கணேசன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பிரியா, தன்னுடைய மகள், மகனுடன் வசித்து வந்தார். சாருநிதி அங்குள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
பிரியா அங்குள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் வேைலக்கு சென்ற பிரியா, மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் மகள் சாருநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
வழக்குப்பதிவு
இதுபற்றி கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானதால், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறந்த சிறுமி சாருநிதி உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொலையா?
சிறுமி சாருநிதி, வீட்டு படுக்கை அறையில் கட்டில் அருகில் அலமாரிக்கு வெளியே உள்ள கம்பியில் சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். சேலையை கட்டி ஊஞ்சல் ஆடுவது போன்று விளையாடி அதனால் கழுத்து இறுகி சிறுமி இறந்து இருக்கலாம் என போலீசார் நினைத்தனர்.
அதே நேரத்தில் சிறுமி சேலையை கட்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வாரா? 9 வயதில் இவ்வளவு சாதுர்யமாக தற்கொலை முடிவை சிறுமியால் எடுக்க முடியுமா? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சிறுமியை யாராவது கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
தாய் உள்பட 2 பேரிடம் விசாரணை
எனவே பிரியாவின் கணவர் இறந்த பிறகு அவருடைய வீட்டுக்கு யார் யாரெல்லாம் வருவார்கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அப்போது பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அந்த நபர் அடிக்கடி பிரியாவின் வீட்டுக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
எனவே சிறுமி சாவு குறித்து பிரியா மற்றும் அந்த நபரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சிறுமி தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story