சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு
நாகர்கோவிலில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
தடம் புரண்டது
குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு உள்ளிட்டவை சரக்கு ரெயில் மூலம் அவ்வப்போது கொண்டு வரப்படுவது வழக்கம். இவ்வாறு வரும் சரக்கு ரெயில்களை நிறுத்தி பொருட்களை இறக்குவதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பிளாட்பாரங்களில் சரக்கு ரெயில்கள் நிறுத்தப்பட்டு, அதில் உள்ள அரிசி மூடைகள் லாரியில் ஏற்றப்பட்டு குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது. 42 பெட்டிகளை உடைய இந்த ரெயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியில் உள்ள சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
மோட்டார் சைக்கிள்கள் சேதம்
எனினும் தண்டவாளத்தை விட்டு விலகிய ரெயில் பெட்டி, தண்டவாள ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. வழக்கு தொடர்பாக ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், தண்டவாள ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிள்கள் தான், ரெயில் பெட்டி மோதி சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பரபரப்பு
தொடர்ந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி நிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மாலை வரை இந்த பணி நடந்தது.
சரக்கு ரெயில் தடம் புரண்ட பிளாட்பாரத்தில் வேறு எந்த ரெயில்களும் நிறுத்தப்படாது என்பதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story