மேட்டூர் பூங்கா மூடப்பட்டது-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மேட்டூர் பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் பூங்கா மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேட்டூர் பூங்கா
மேட்டூருக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தங்களது வீடுகளில் இருந்து உணவை எடுத்து வந்து பூங்காவில் வைத்து சாப்பிடுவதுடன், பொழுதை கழித்து விட்டு மாலையில்தான் வீட்டுக்கு செல்வார்கள்.
அதிலும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கொேரானா பரவல் குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் பூங்கா திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் வந்து சென்றனர்.
மூடப்பட்டது
இந்த நிலையில் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் வீர்பிரதாப் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது என்றும், எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதற்காக பூங்காவை சில நாட்கள் மூட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதாவது நேற்று (1-ந் தேதி) முதல் நாளை (3-ந் தேதி) வரை 3 நாட்கள் பூங்காவை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பூங்கா நேற்று மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகை நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பூங்கா மூடப்படுவது குறித்த தகவல் நேற்று முன்தினமே வெளியானாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் மேட்டூர் பூங்காவுக்கு வந்தனர். அங்கு பூங்கா மூடப்பட்டு இருப்பதை கண்டதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஒரு சிலர் மேட்டூர் பூங்கா அருகில் உள்ள மீன் வருவல் கடைகளில் மீன்களை வாங்கி சமைத்து உண்டதுடன், அங்குள்ள வாய்க்காலில் பாய்ந்து ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழா என்பதால் மேட்டூருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவே கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடக்கூடாது என்பதற்காக பூங்கா மூடப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story