உப்பிலியபுரத்தில் 2 பேரை தாக்கிய சிறுத்தை கொல்லிமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது


உப்பிலியபுரத்தில் 2 பேரை தாக்கிய  சிறுத்தை கொல்லிமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது
x
தினத்தந்தி 2 Aug 2021 7:28 AM IST (Updated: 2 Aug 2021 7:28 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரத்தில் 2 பேரை தாக்கிய சிறுத்தை கொல்லிமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது.


உப்பிலியபுரம், 
உப்பிலியபுரத்தில் 2 பேரை தாக்கிய சிறுத்தை கொல்லிமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது.

சிறுத்தை நடமாட்டம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி எல்லைக்குட்பட்டது ஆங்கியம் கிராமம். வனப்பகுதியின் அருகில் உள்ள இந்த கிராமத்தை ஒட்டி உள்ள கரட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 6 வயது ஆண் சிறுத்தை ஒன்று உலா வந்தது.

அப்போது, இதைப்பார்த்த மகேஸ்வரி(வயது 47) என்ற பெண் ஊர்மக்களிடம் கூறினார். அவர்கள் வதந்தி என்று நினைத்தனர். இந்தநிலையில்  காலை 10 மணியளவில் ஆங்கியம் கரட்டிலிருந்து, கோனேரிப்பட்டி முருகன் கோவில் கரட்டிற்கு இடம் பெயர்ந்த சிறுத்தையை, வயல்களில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலித்தொழிலாளிகள் பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

2 பேரை தாக்கியது

இதைத்தொடர்ந்து பொது மக்கள் திரண்டு வந்து சிறுத்தையை  தேடிய நேரத்தில், சிறுத்தை இடம் பெயர்ந்து மீண்டும் ஆங்கியம் கரட்டில் தஞ்சம் புகுந்தது. அப்போது ஆங்கியத்தை சேர்ந்த மனோகரனின் மகன் ஹரிபாஸ்கர் (21), விவசாயி துரைசாமி(60), நல்லேந்திரன்(55), கோனேரிப்பட்டியை சேர்ந்த சவுந்தர்ராஜன்(45) ஆகியோர் ஆங்கியம் கரட்டில் சிறுத்தையை தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சிறுத்தையை தேடும் போது செல்பி எடுக்க ஆசைப்பட்ட ஹரிபாஸ்கர் கையில் தடியுடன் செல்போனில் படம் எடுத்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஹரிபாஸ்கர் மற்றும் துரைசாமியை மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கியது. பின்னர் அது அங்குள்ள கரட்டு பகுதியில் இருந்த குகையினுள் தஞ்சமடைந்தது. 

டிராப் கேமரா பொருத்தம்

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா தலைமையில் வனத்துறையினரும், துறையூர், உப்பிலியபுரம், தா.பேட்டை போலீசாரும் கரட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய ஆங்கியம் கரட்டின் இருபக்கங்களிலும் வனத்துறையினரால், இரவிலும் துள்ளியமாக படம் பிடிக்கும் டிராப் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

கேமராவில் சிக்கியது

வனவிலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சிறுத்தை நடமாட்டத்தை முன்னிட்டு இப்பகுதியில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் வனத்துறையினர் பொருத்தி இருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை நேற்று காலை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை ஆங்கியம் கரட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் வெளியேறிய காட்சிகள் பதிவாகி இருந்தன.

கொல்லிமலைக்கு இடம்பெயர்ந்தது

இதைத்தொடர்ந்து துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி, திருச்சி வனச்சரகர் குணசேகர், நாமக்கல் வனச்சரகர் பெருமாள், புளியஞ்சோலை வனவர் பிரியங்கா, வனபாதுகாவலர் கவாஸ்கர் ஆகியோர் கொண்ட குழு சிறுத்தையின் பாத சுவடுகளை 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆய்வு செய்தனர். இதில், சிறுத்தை கொல்லிமலை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

1,000 மீட்டர் உயரமும், 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட கொல்லிமலை அடர்ந்த வனப்பகுதியாகும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையின் அடிவாரப்பகுதியான புளியஞ்சோலை திருச்சி மாவட்டத்தை சேர்ந்ததாகும். புளியஞ்சோலையில் நீர்மின்திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் அது சுற்றுலா தலமாக உள்ளதால் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

வனத்துறையினர் எச்சரிக்கை

இந்தநிலையில், சிறுத்தையின் நடமாட்டம் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலையில் இருப்பதால் பொதுமக்கள் புளியஞ்சோலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
2 பேரை தாக்கிய சிறுத்தை இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story