ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன: உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம்


ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன: உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம்
x
தினத்தந்தி 2 Aug 2021 6:53 PM IST (Updated: 2 Aug 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

உலகில் முதல் மனிதன் லெமூரியா கண்டத்தில்தான் தோன்றினான் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன என ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி பேசினார்.

சென்னை,

லெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மையம் சார்பில் பல்வேறு சமுதாய பிரமுகர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் சேதுராமன் தலைமை தாங்கினார். அதன் நிறுவனத் தலைவர் ரவீந்திரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பா ளராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ப.ஜோதிமணி, அகில இந்திய தடகள வீரர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ரவீந்திரா எழுதிய ‘லெமூரியா காலம் முதல் தமிழர்களின் வரலாற்று உண்மைகள்' என்ற புத்தகத்தை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி வழங்க, சென்னைவாழ் நாடார்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து நாடார், வீரசைவ பேரவை மாநிலத் தலைவர் மல்லிகை நாகரெத்தினம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முதல் மனிதன்

ஆய்வு கூட்டத்தில் நீதிபதி ஜோதிமணி பேசியதாவது:-

உலகில் முதல் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம். இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஆணித்தரமான ஆதாரங்களும் உள்ளன. இந்த லெமூரியா கண்டம்தான் முன்பு குமரிக் கண்டமாக இருந்தது. முதல் தமிழன் தோன்றிய இடம் இந்த குமரிக் கண்டம்.

தமிழை நாம் தாய்மொழி என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், தமிழ் தந்தைமொழி. உயிர் கொடுத்தவன் தந்தை, உடல் வளர்த்தவள் தாய். இவ்வாறு உலக மொழிகளுக்கு உயிரைக் கொடுத்த தந்தைமொழியாக தமிழ் விளங்குகிறது. இதற்கு ஆய்வுபூர்வமான சாட்சிகள் இப்போது இருக்கின்றன.

தெய்வ மொழி

உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இருக்கிறது. ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல சொற்கள் தமிழில் இருந்து தோன்றி உள்ளன.

தமிழை தோற்றுவித்தவர் சிவபெருமான். தமிழ் ஒரு தெய்வமொழி. முதல் தமிழ்ச் சங்கம் தோன்றியது குமரிக் கண்டத்தில்தான். அதை தோற்றுவித்தவர் சிவபெருமான். 2-வது தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர் முருகப்பெருமான். 3-வது தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர் மதுரை மீனாட்சி. இவற்றை ஆவணப்படுத்தவே இந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் எஸ்.வி.சேகர், நெல்லை வசந்தன், நெல்லை-தூத்துக்குடி மகமை பரிபாலன சங்கத்தின் பொருளாளர் மாரித்தங்கம், செயலாளர்கள் கொட்டிவாக்கம் முருகன், மயிலை சந்திரசேகர், நாடார் மகாஜன சங்க இணைச் செயலாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், லெமூரியா உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்த மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் ஆர்த்தி உள்பட பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story