தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டனர்.
இந்த நிலையில் தர்மபுரி அருகே உள்ள மத்திமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன், அவருடைய மனைவி கல்லினா மற்றும் இவர்களுடைய உறவினர்கள் சிலர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கல்லினா திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போலீசார் விசாரணை
இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வந்திருந்த உறவினர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கல்லினா கூறுகையில், எங்கள் விவசாய நிலத்தின் அருகே தனியார் வீட்டுமனைகள் போடப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் அந்த வீட்டுமனைகள் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் எங்கள் விவசாய நிலத்தில் புகுந்து தேங்குகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. மேலும் அங்கு விவசாயம் செய்வது கேள்விக்குறியாக உள்ளது. மழை நீரை மாற்று வழியில் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இருந்த போதிலும் இந்த பிரச்சினை தொடர்வதால் தீக்குளிக்க முயன்றேன் என்று கூறினார்.
இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story