தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பா.ஜ.க. மாவட்ட செயலாளராக இருந்த ராஜேஷ்கண்ணா என்பவர் கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு அல்லிநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் குற்றம்சாட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் பா.ஜ.க. மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும், மருத்துவமனை டாக்டர்களான முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் நாட்டுமாடு நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், மாட்டு வண்டி பந்தயம், குதிரை பந்தயம், சேவல் சண்டை, கிடா முட்டு சண்டை ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும், மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஆதி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story