வீடுகளுக்கே தேடி சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்


வீடுகளுக்கே தேடி சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 2 Aug 2021 10:12 PM IST (Updated: 2 Aug 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

இணைய வசதியை அனைவராலும் பெற முடியாத சூழலில் மாணவர்களின் வீடுகளுக்கே தேடி சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகிறார்கள்.

விக்கிரவாண்டி, 

இன்றைய சூழலில் உலகத்தை புரட்டி போட்டு இருக்கும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் என்பது எண்ணிலடங்காதவை ஆகும். அதில் ஒன்று, குழந்தைகளின் கல்வி. கல்வி ஒன்றே தாழ்ந்து கிடக்கும் மக்களை மேலே உயர்த்தும் என்பார்கள்.


ஆனால், பெருந்தொற்று காலம் என்பதால் பள்ளிகள் அனைத்தும் முடங்கிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் தான் இன்று குழந்தைகளின் வகுப்பறைகளாக மாறிவிட்டது. ஆனால், இணைய வசதியை அனைவராலும் பெற முடியாத சூழலில் மாணவர்கள் உள்ளனர். இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 

ஊராட்சி ஒன்றிய பள்ளி

இதுபோன்ற சூழலில், ஆசிரியர்கள் மாணவர்களின் இடத்துக்கே சென்று வகுப்புகள் எடுத்து வருவது, மாணவர்களின் கல்விக்கு வலுசேர்ப்பதாக அமைந்து வருகிறது. 

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பாடம் எடுத்து வருகிறார்கள்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

வீடுகளுக்கு சென்று பாடம் நடத்துகிறார்கள்

விக்கிரவாண்டி கீழ் மாடவீதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பேரூராட்சி  பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, 1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுத்து வருகிறார்கள்.

 இதற்கென, தினசரி ஒரு பகுதி என்று தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை முதலில் சேகரிப்பு செய்கிறார்கள். 

பின்னர் உரிய திட்டமிடல் செய்து, மாணவர்களை அந்தந்த பகுதியில் ஒன்று சேர்த்து, ஆசிரியைகள்  வனிதா, மாலதி, ராணி, ஜெயந்தி, சாந்தி ஆகியோர் பாடங்களை நடத்தி வருகிறார்கள். இதை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவநேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தும் வருகிறார். 


அடிப்படை கல்வி

ஒவ்வொரு குழந்தையும் அடிப்படை கல்வியை கற்க வேண்டும். அதுவே அவர்களை மேன்மேலும் உயர்த்தும் என்பதுடன், குழந்தை தொழிலாளர் இல்லாத ஒரு நிலையை உருவாக்கும் என்பார்கள்.

ஆனால், கொரோனா பெருந்தொற்றால், ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த  குழந்தைகளின் அடிப்படை கல்வி என்பது இன்று கேள்வி குறியாக மாறி உள்ளது. இது எதிர்வரும் காலத்தில் எந்த மாதிரியான எதிர்வினைகளை  உருவாக்கும் என்கிற கேள்வி இன்று நம்முன்னே இருக்கிறது.

 இதுபோன்ற சூழலில் அடிப்படை கல்வியான 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீடுகளுக்கே தேடி சென்று பாடம் கற்பிக்கும் விக்கிரவாண்டி ஆசிரியர்களின் முயற்சி வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

 இது  பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருப்பதுடன்,  மாணவர்களிடையே புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story