கழிவுநீரை ஏரியில் கலந்த நகராட்சி லாரியை சிறை பிடித்த பொதுமக்கள். அதிகாரியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கழிவுநீரை ஏரியில் கலந்த நகராட்சி லாரியை சிறை பிடித்த பொதுமக்கள். அதிகாரியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 10:32 PM IST (Updated: 2 Aug 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் ஏரில் கழிவுநீரை கலந்ததால் நகராட்சி லாரியை சிறை பிடித்த பொதுமக்கள், பேச்சுவார்த்தை நடத்தவந்த அதிகாரியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

லாரி சிறை பிடிப்பு

திருப்பத்தூர் நகராட்சி 8-வது வார்டு பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனம் திருப்பத்தூர் நகராட்சி மூலம் கழிவு நீரை வெளியே லாரி மூலம் கழிவு நீரை உறிஞ்சி எடுத்து திருப்பத்தூரில் இருந்து மாடப்பள்ளி செல்லும் வழியில் உள்ள பெரிய ஏரியில் கழிவு நீரை திறந்து விட்டுள்ளனர். 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து திருப்பத்தூர் நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது மோட்டார்சைக்கிள் மீது காலை தூக்கி வைத்துக்கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

அதிகாரியை முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களை அவமதிப்பதாகக்கூறி அவரை முற்றுகையிட்டனர். உடனடியாக தகவலறிந்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி இதுபோன்ற நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story