வாணியம்பாடியில் தூய்மை பணிகள் குறித்து வீடு வீடாக கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடியில் தூய்மை பணிகள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தார். ஆம்பூரிலும் ஆய்வு மேற்கொண்டார்.
வாணியம்பாடி
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தை முழு சுகாதாரம் நிறைந்த மாவட்டமாகவும், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகவும் உருவாக்க, மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று காலை வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள 32, 34 ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக நடந்து சென்று சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளையும், கால்வாய் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதை பார்த்து உடனடியாக நகராட்சி அதிகாரிகளை அழைத்து ஒரு வார காலத்தில் இப்பகுதிகள் அனைத்தும் முழுமையாக தூய்மையாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து அதேப் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று வீட்டில் இருப்பவர்களை வெளியில் அழைத்து குப்பைகளை தரம்பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனரா என்ற விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும் எனவும், அவ்வாறு வாங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்த ஆய்வின் போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, நகராட்சி பொறியாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் அலி, சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஆம்பூர்
அதேபோன்று ஆம்பூர் நகரப்பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதையும், பாலாற்றங்கரையில் கழிவுநீர் கலப்பதையும் குப்பைகள் உள்ளதையும் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு குப்பைகளை ஒரு வாரத்திற்குள் முறையாக அகற்றிட நகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும் நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் குப்பை கூடைகளை வைத்து குப்பையை சேகரித்து நாள்தோறும் குப்பை வண்டிகளில் வழங்குமாறு கடைக்காரர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story