திருக்கோவிலூர் அருகே காட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி
திருக்கோவிலூர் அருகே காட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி என்பது தெரியவந்தது. நகை-பணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
திருக்கோவிலூர்
பெண் பிணம்
திருக்கோவிலூர் அருகே கொழுந்துராம்பட்டு கிராமத்தில் கடந்த மாதம் எரிந்த நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு இறந்து கிடந்த பெண் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அடையாளம் தெரிந்தது
இதையடுத்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காட்டில் எரிந்து கிடந்த பெண் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வையாபுரி மனைவி பார்வதி(வயது 65) என்பது தெரியவந்துள்ளது. வையாபுரி சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனது இளையமகன் சங்கருடன் வசித்து வந்த பார்வதி அவருடன் கோபித்துக்கொண்டு தனியாக வசித்து வந்தார். கடந்த 13-ந் தேதி பென்ஷன் பணம் வாங்குவதற்காக திருக்கோவிலூர் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை என பார்வதியின் குடும்பத்தினர் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.
மகன், மகளிடம் விசாரணை
இதையடுத்து பார்வதியின் மகன் சங்கர், மகள் வெண்ணிலா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பார்வதியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, கையில் அணிந்திருந்த வளையல்கள் மற்றும் பணம் ஆகியவற்றை காணவில்லை. இதனால் நகை-பணத்துக்காக அவரை யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story